Sunday, March 19, 2017

முகவுரை


அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ
குடஜாத்ரி மலை அடிவாரத்தில் குடியிருக்கும் மூகாம்பிகை பகவதி திருக்கோவில் முதல் பாரதத்தின் தென்கோடியாம் குமரி முனையில் நித்யகன்னியாய் தவமிருக்கும் கன்னி பகவதி திருக்கோவில் வரை எழுந்தருளியிருக்கும் பல்வேறு பகவதி க்ஷேத்ரங்களை தரிசிக்கும் புனித யாத்திரையே, குடஜாத்ரி முதல் குமரி வரை ஆகும்.
இந்த புனித யாத்திரையின் மூலம் மலைநாட்டு பகவதி க்ஷேத்ரங்களின் புராணம், மகத்துவம், பகவதி நிகழ்த்திய மாஹாத்மியங்கள் போன்ற பல தகவல்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
மலைகள், கடல்கள், காடுகள் என இயற்கை சூழ்ந்த பகுதிகளிலே பகவதி நித்ய வாசம் புரிகிறாள். சரி, பகவதி என்றால் என்ன ?
பகவதி என்றால் தாய் என்றே பொருள். ஒரு தாயிடமே குழந்தையைப் பற்றிய நல்ல குணங்கள் இருக்கும். அதன்படி, நம்மை பாதுக்காத்து அருள்பவள், பகவதி! பக என்றால் ஞானம், வீரம், பேரோளி, செல்வம், தலைமைத்துவம், கருணை என்னும் ஆறு கல்யாண குணங்கள். அந்த ஆறு கல்யாண குணங்களை உடையவள் பகவதி !
அவள் தன்னுடைய கல்யாண குணங்களால், வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு ஸ்தலங்களில் வீற்றிருந்து நம்மையெல்லாம் ரக்ஷிக்கிறாள். அப்படி அவள் வீற்றிருக்கும் க்ஷேத்ரங்களை காணவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

நம்முடைய இந்த பகவதி க்ஷேத்ர யாத்திரையில் முதலில் நாம் சேவிக்க இருப்பது கொல்லூர் மூகாம்பிகை பகவதி. வாருங்கள் நம்முடைய புனித யாத்திரையை குடஜாத்ரியில் இருந்து தொடங்குவோம்.
தொடர்ந்து தரிசனம்....

No comments:

Post a Comment